Wednesday, July 10, 2019

டென்ஷனிலிருந்து ரிலாக்ஸ் ஆவது எப்படி? (Tension Relief)

✓ 1. இறுக்கம்.

மனதை ஒருபோதுமே இறுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இறுக்கமான ஒரு ரப்பர் பேண்டால் சுற்றி வைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது அதை மெதுவாக அவிழ்த்து, அந்த இறுக்கத்திலிருந்து விடுபட்டு மெல்ல வெளியே வாருங்கள்.

✓ 2. ஒரு நிமிடம்.

வேகமான வாழ்க்கைச் சூழலில் சாந்தமான சில நிமிடங்களையும் அவ்வப்போது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் எதுவுமே செய்யாமல் ஒரு கணம் அப்படியே மெளனமாக இருங்கள். கடவுள் சிந்தனைக்கு ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். மலை மீது தவழும் மேகக் கூட்டங்களை ரசிக்க ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். இப்படியே ஒரு நாளில் இதுபோன்ற ரசனை கணங்களுக்காக எவ்வளவு நேரம் உங்களால் ஒதுக்க முடியும் என்று பாருங்கள்.

✓ 3. ஆழமான மூச்சு.

நீங்கள் ஒருவித மனப்பதற்றத்துக்குள் அமிழப்போவதாகத் தோன்றினால், உடனடியாக ஒரு ஆழமான மூச்சு எடுத்து, பின் நிதானமாக காற்றை வெளியேற்றுங்கள். இப்போது மறுபடியும் ஒருமுறை அப்படிச் செய்யுங்கள். பின் மூன்றாவதாக மீண்டும் ஒரு முறையும் அப்படியே காற்றை இழுத்து வெளியேற்றுங்கள். ஆழமான மூச்சுப் பயிற்சி மன இறுக்கத்தை விரட்டியடிக்கும்.

✓ 4. இலை.

ஒரு சாய்வு நாற்காலியில் ஒரு நிமிடம் சற்றே தளர்வாக அமருங்கள். தலையை நாற்காலியில் சாய்த்துக் கொண்டு கால்களை நீட்டி வையுங்கள். இப்போது உங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, பின் மெதுவாக அப்படியே கீழே உங்கள் கால் முட்டின் மீது கொண்டு வாருங்கள். இது ஒரு ஈர இலை மரத்துண்டு ஒன்றின் மேல் விழுவதுபோல் இருக்கட்டும். இந்த செயல் உங்கள் இறுக்கத்தை தளர்த்தி இளைப்பாற வைக்கும்.

✓ 5. காட்சிப்படுத்துங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் ரசித்த அமைதியும், அழகும் நிறைந்த ஒரு இடத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டுவாருங்கள். அற்புதமான உங்கள் நினைவாற்றலின் துணையுடன் உங்களுக்கு மனசாந்தி கொடுத்த அந்த சிலிர்க்கும் அனுபவத்தை இப்போது மீண்டும் சுவையுங்கள். இப்படியே அழகான ஒரு சமவெளி, பிரமிப்பூட்டும் ஒரு கடற்கரை, மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு புல்வெளி என்று உங்கள் நினைவடுக்குகளிலேயே பயணம் செய்யுங்கள்.

✓ 6. சாந்தி.

உங்கள் மனதையும், உடலையும் வருடிச் செல்லும் இறை அமைதியைப் பற்றிய ஒரு கருத்தாக்கத்தை உங்களிடம் உருவாக்குங்கள். இப்போது அது உங்கள் ஆன்மாவுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்வதை உங்களால் உணர முடியும். இப்போது உரக்கச் சொல்லுங்கள்: “கடவுளின் அமைதி எனது நெருக்கடிகளை இளைப்பாறுதலாக மாற்றி விடுகின்றன.”

✓ 7. வடிகால்.

உங்களை பலவீனமடையச் செய்யும், போராட்டமும் பதற்றமும் மிகுந்த எண்ணங்களை உங்களிடம் இருந்து வடிந்துபோகச் செய்யுங்கள். இப்போது இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்கள் மனக்குடுவையில் இருந்து மெதுவாக வெளியேறி வடிந்து போவதை உங்களால் பார்க்கமுடியும். அவை அப்படியே வெளியேறட்டும், விட்டு விடுங்கள்.

✓ 8. சொற்கள்.

சொற்கள் நிகழ்த்தும் குணச் சிகிச்சையை கற்றுக் கொள்ளுங்கள். இரக்கமற்ற கடுமையான சொற்களுக்குப் பதிலாக, இனிமையும், மென்மையும் கலந்த வெகு சாந்தமான சொற்களையே கையாளுங்கள். அந்த சொற்களின் தாக்கம் வெளிப்படும் வகையில் அவற்றை மிக மிக மெதுவாக உச்சரியுங்கள். புனிதமும், அமைதியும், சாந்தியும், இளைப்பாறுதலும் தரும் சொற்களையே பயன்படுத்துங்கள்.

✓ 9. அமைதியாக இருங்கள்.

குறைந்தபட்சம் ஒரு நாளின் பத்து நிமிடங்களையாவது ஆளரவமற்ற அமைதியான சூழலுக்கு ஒதுக்குவது மனப் பதற்றத்துக்கு எதிரான ஒரு நல்ல மருந்தாகும். அமைதியான அந்த பொழுதில் ஒரு கவிதையை வாசிக்கலாம். கண்மூடி தியானிக்கலாம். இந்த பழக்கம் மீண்டும் மீண்டும் தொடரும்போது அது உங்கள் மனப் பதற்றத்தை வேரோடு அகற்றி விடுகிறது.

நன்றி - நார்மன் வின்சென்ட் பீலே

Tuesday, July 9, 2019

அவசியமான வாழ்க்கை பழக்க முறைகள்..!

சில அவசியமான வாழ்க்கை பழக்க முறைகள்..!

👍 தினமும் தூங்கப்போகும் நேரம் ஒரே நேரமாக இருக்கட்டும். இரவு 9 மணியோ (அ) 10 மணியோ தினமும் அதே நேரத்திற்கு தூங்கச்செல்லவேண்டும்.

👍 தினமும் காலை 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்.

👍 காபி, புகையிலை, டீ, மது இவற்றினை அடியோடு தவிர்த்துவிட வேண்டும்.

👍 காலையில் உடற்பயிற்சி செய்வது முதல்வேலையாக இருக்கட்டும்.

👍 மாலையில் யோகா செய்யுங்கள். இதனை காலையிலும் செய்யலாம்.

👍 பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.

👍 உங்கள் படிப்பு (அ) வேலைக்கு அவசியமான ஒன்றினை தினமும் கற்றுக்கொள்வது நல்லது ஆகும்.

👍 எந்த இடத்திலும் முதலில் காதுகொடுத்து கேட்க வேண்டும்.

👍 உங்கள் நேரம், பணம் இரண்டும் உங்கள் வாழ்வின் சக்தி. அதனை எக்காரணம் கொண்டும் வீணடிக்க வேண்டாம்.

👍 தோற்றமும் அவசியம் தான். எப்பொழுதும் சுகாதாரமாக இருங்கள்.

👍 நாம் தினமும் நமது பிரச்சினைகளுக்குள் மூழ்கியே நேரத்தினை வீணடிக்கின்றோம். அதனால் நாம் நமது குறிக்கோளில் இருந்து தவறி விடுகின்றோம். தினமும் காலையில் ஒருமுறை உங்கள் குறிக்கோளினை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

👍 புன்னகை செய்யுங்கள், பார்த்தாலே சண்டைபோடுபவர் போல இருப்பது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல.

👍 நல்ல காலை உணவு நல்ல நாளின் ஆரம்பம். பழம், ஓட்ஸ் போன்றவை உங்கள் காலை உணவினை சத்துள்ளதாக்கும்.

👍 தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை கலந்து நீராக பருகுங்கள். வைட்டமின் சி சத்து கிடைக்கும், சக்தி கூடும், உடலின் வீக்கங்கள் குறையும்.

👍 உடற்பயிற்சி என்பதனை அன்றாடம் 20 நிமிடமாவது செய்யுங்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.

👍 நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடக்கவேண்டும்.

👍 தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்.

👍 பட்ஜெட் அவசியம். சேமிப்பு சிறிதளவாயினும் அவசியம்.

👍 ஏதாவது ஒன்றினை (நல்லதினை) தினமும் கற்றுக் கொள்ளுங்கள், மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.

👍 உங்கள் டேபிள், பீரோ இவற்றினை சுத்தமாய் முறையாய் வையுங்கள். குப்பைகூளம் போல் வைக்காதீர்கள்.

👍 பயம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும், நம்மையும் உயிரோடு கொல்கின்றது. முதலில் பயத்தினை உடைத்தெரியும் வழியினைப் பாருங்கள்.

👍 ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

👍 உங்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

👍 ஏதாவது ஒரு நல்ல புத்தகம் படிப்பதினை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

👍 எட்டு மணிநேரம் தூங்குங்கள்.

👍 தவறான பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள். எதையும் எண்ணி வருந்தி மூழ்காதீர்கள்.

சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்

சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்
  
ஈசன் அருள்பாலிக்கும் அற்புதமான கோவில்களில் ஒன்றுதான், திருநெல்வேலி (தற்போது தென்காசி) மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்.

சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம் - திருநெல்வேலி

அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலை என்றாலே, தென்றலின் ராஜாங்கமும், மூலிகையின் வாசமும், சிவபெருமானின் அருளாட்சியும் சிறப்பாக விளங்கும் இயற்கை பெட்டகமாகும். சதுரகிரி மலை, குற்றால மலை, அத்ரி மலை, பொதிகை மலை, மகேந்திரகிரி மலை, பாபநாச மலை என இறைவனின் அரசாட்சி, மேற்கு தொடர்ச்சி மலை முழு வதும் பரவியிருக்கிறது. நாடி வரும் பக்தர்களை பல ரூபத்தில் காட்சி தந்து அரவணைத்து, அவர்களுக்கு வாழ்வில் நலமும் தந்தருளும் சித்தர்களும் இந்த மலையில் அதிகம்.

அப்படி ஈசன் அருள்பாலிக்கும் அற்புதமான கோவில்களில் ஒன்றுதான், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்.

கால்நடையாய் நடந்து, மலை ஏற்றத்தில் வியர்வை சிந்த ஏறியபடி, இறைவனை நாடிச்செல்லும் சுகமே தனிதான். அங்கு அவனை கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ‘உன்னைப் பார்த்ததே ஆனந்தம்’ என்று பரவசமடையும் நிலை வாழ்வில் உன்னதமானது. அப்படி ஒரு ஆன்மிக பரவசத்தைத் தரும் இடமாக சுயம்பூற்று நாதர் ஆலயம் இருக்கிறது. இந்த இடம் யோகிகளும், சித்தர் பெருமக்களும், சாதுக்களும் தங்கியிருந்து, இந்த தேசம் வளம்பெற தவம் இயற்றிய இடம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மலை ‘சித்தர் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சொக்கம்பட்டி மலைப் பகுதியில், ஒரு மேய்ப்பன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். செல்வச்செழிப்பாக இருந்த அந்த காட்டில் அந்த சமயத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மலைகளில் தழைகள் எல்லாம் காய்ந்து கருகிபோய் விட்டன. மழை இன்றி, மலைகளில் இயற்கையாகவே சுரக்கும் சுனைகளும் கூட வற்றி விட்டது. கால் நடைகளை காக்க வேண்டுமே. எனவே மலையில் ஒவ்வொரு இடமாக சென்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டே இவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான், மேய்ப்பன்.

அவனுக்கும் தாகம், சமையல் செய்யவேண்டும் என்றாலும் தண்ணீர் இல்லை. இதனால் கால்நடைகளில் கோமியத்தை பிடித்து தாகத்தை போக்கியும், சமையல் செய்தும் வாழ்ந்து வந்தான். இயற்கை அன்னை, கொடுத்த அருட்பிரசாதமாய், கால்நடைகள் கூட ஒரு சில மூலிகைச் செடியை மேய்ந்து, அதிலிருந்து கிடைத்த நீரில் தங்களது தாகத்தை தணித்துக் கொண்டன. அந்த மூலிகை, மாடு மேய்ப்பவனுக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து தாகத்தைதான் தணிக்க முடியும். சமையல் செய்ய முடியாதே.. எத்தனை நாள்தான் கோமியத்தை வைத்து சமையல் செய்வது. எனவே அந்த மேய்ப்பன், தன்னுடைய மனத்துயரை துடைக்கும்படி சிவ பெருமானை வேண்டினான்.

பின்னர் திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதன்படி தான் மேய்த்து வந்த கால்நடைகளை, சற்று பள்ளமான இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு, மீண்டும் அதே இடத்திற்கு வந்தவன், “இறைவா! மழை பெய்து இங்குள்ள வறட்சி நீங்க வேண்டும். தண்ணீர் பஞ்சமின்றி கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் இங்கேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று சொல்லி இறைவனிடம் மன்றாடினான்.

என்ன ஆச்சரியம். திடீரென்று இடி இடித்து, மின்னல் வெட்டி, மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் தானாகவே ஒரு ஊற்று தோன்றியது. அதில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. மேய்ப்பன், தண்ணீரை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டான். அதை தாகம் தீரும் வரை குடித்தான். இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தான். தன் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

மலையின் மீது தானாக தோன்றிய ஊற்றுக்கு, ‘சுயம்பு ஊற்று’ என்றும், பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு ‘சுயம்பூற்று நாதர்’ என்றும் பெயரிட்டான்.

சொக்கம்பட்டியில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னையை தாய் தெய்வம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்தன மாரியம்மனை வழிபட்டு விட்டு, அங்கிருந்து மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். இவர் சுயம்பூற்று விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரும் வேண்டும் வரம் தருவதில் வல்லவர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பலரும் இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்க முடியும். அரசு வேலை கிடைக்கவும் இந்த விநாயகரை வழிபடுகிறார்கள். விநாயகர் கோவில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஆங்காங்கே அமர்ந்து தியானம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் இரவு நேரத்தில் இங்கு தங்குவதை தவிர்ப்பது நல்லது.

விநாயகரை தரிசனம் செய்து விட்டு, மலை ஏற வேண்டும். சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சுயம்பூற்று நாதரை வணங்கச் செல்லும் வழி நெடுகிலும் பல அனுபவங்கள் கிடைக்கலாம். பாவு ஊற்று ஓடை, வண்ணாத்தி பாறை, ஆலமரம், மலை முருகடு என கரடு முரடான சாலைகளைக் கடந்து செல்ல வேண்டும். பின்னர் மலையின் மறு பகுதியில் அகலமான பள்ளத்தில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு பக்கம் பாறை, மறு பக்கம் அதல பாதாளம். கொஞ்சம் கவனமாக செல்ல வேண்டிய திருத்தலம் இது.

ஓரிடத்தில் பாதையின் கீழே மிகப்பெரிய பாறை இருக்கிறது. அந்தப் பாறை இடுக்கில் ஒரு பள்ளம் காணப்படும். அந்தப் பள்ளத்தில் இறங்கி உள்ளே சென்றால் விசேஷமான குகை காணப்படுகிறது. அந்த குகையின் மேல்மட்டத்தில் பாறை ஒன்று தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும். அதையும் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான அறை. இரண்டு குகை. அதற்குள் செல்லும் போது கவனமாக இறங்க வேண்டும். அங்கு சென்றதுமே நம் உடலில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை உணரமுடியும். இங்கு இன்றும் சித்தர்களும், சாதுக்களும் தங்கி பூஜை, தியானம் செய்து செல்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்திற்கு அடுத்ததாக வரும் பள்ளத்தாக்கில் தான், இந்த ஆலயத்து இறைவன் வீற்றிருக் கிறார். பழைய லிங்கம் தனியே இருக்க, புதியதாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் சுயம்பூற்று நாதருக்கு அருகில் பிள்ளையார் மற்றும் அம்மன் இருந்து அருள் பாலிக்கிறார்கள். அங்கிருந்து கொஞ்சம் மலை ஏறிச் சென்றால், அபூர்வ ஊற்றை காணலாம்.

ஊற்றுப் பகுதியில் இருந்து சற்று மேலே சென்றால், அகத்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் தவம் செய்த பாறை ஒன்று உள்ளது. இந்த இடத்துக்கு வந்தாலே, பிறவிக்கடன் நீங்கும் என்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வந்து சென்றாலேயே இயற்கையானச் சூழலும், மூலிகை காற்றின் வாசமும் இதயம் மற்றும் சிறுநீரக நோய்களை அகற்றுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இந்த ஆலயத்திற்கு யார், எப்போது வந்து பூஜை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தினமும் நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றனவாம்.

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது சொக்கம்பட்டி. இங்குதான் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மனை வழிபட்டு விட்டு, மலை அடிவாரத்திற்குச் சென்று சுமார் 6 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பஸ் வசதி கிடையாது என்பதால் சொந்த வாகனத்திலோ, அல்லது நடந்தோ தான் செல்ல வேண்டும். அதன்பிறகு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு மலை ஏறி, இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த மலைக்கு செல்வதற்கு வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.

அதிசயம் நிறைந்த நீரூற்று

இத்தலத்தில் இருக்கும் ஊற்றானது, அபூர்வ ஊற்றாக திகழ்கிறது. அதாவது இந்த பகுதிக்கு எத்தனை பேர் வந்து தங்குகிறார்களோ, அவர்களுக்கு தேவையான நீர் மட்டுமே இந்த ஊற்றில் இருந்து கிடைக்குமாம். தேவையை தாண்டி ஊற்று ஊறாது என்பது இந்த கலியுகத்திலும் நடக்கும் அதிசயம் என்று இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். அதே போல் கெட்ட எண்ணத்துடன் இந்தப் பகுதிக்கு வரும் நபர்கள் இந்த ஊற்றின் பக்கம் சென்றால், மறு நிமிடமே ஊற்று வற்றிவிடும் என்பது அதிசயிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த ஊற்றில் சூடத்தை ஏற்றி இறைவனை வணங்கினால், அந்தச் சூடம் ‘ஓம்’ வடிவத்தில் தண்ணீரில் சுற்றிவருவதைக் கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை ....

நல்ல குடும்பம்

நல்ல குடும்பம்...!!

வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

*இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால்,
அதற்கு என்ன வழி?*

மூன்று பண்புகள்:

1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு
மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ
அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான்
அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.”
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்,

அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்.
அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை
ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே
உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி..

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற
கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம்.

*பத்து வழிகள்:*

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம்.
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது
ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிற்க்கு இடம்  தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல்,
தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி
யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே
இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

*தத்துவஞானி வேதாத்திரி மஹரிஷி*

*நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!!*